×

சாயல்குடி அருகே பனைத்தொழில் சிறக்க 51 கிடாக்கள், 101 சேவல்களை பலியிட்டு கமகம கறி விருந்து: பனை ஓலையில் பரிமாறி அசத்தல்

சாயல்குடி: சாயல்குடி அருகே பனை தொழில் சிறக்க வேண்டி, கோயில் திருவிழாவில் 51 கிடாக்கள், 101 சேவல்கள் பலியிட்டு அசைவ உணவு தயாரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோருக்கு பனை ஓலையில் விருந்து பரிமாறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் வெள்ளப்பட்டி கிராமத்தில் பத்திரகாளியம்மன், தீவு முனியசாமி கோயில் வருடாந்திர திருவிழா கடந்த செப்.26ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவில் கிராம மக்கள் கும்மியாட்டம், ஒயிலாட்டம் ஆடி கொண்டாடினர்.

பனை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பனைத் தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. பனை சீசன் ஆண்டுதோறும் தை மாதம் துவங்கி ஆவணி மாதத்தில் முடிவடையும். பனை தொழில் செழிப்பதற்காக தீவு முனியசாமிக்கு நேர்த்திக்கடனாக விட்ட 51 கிடாக்கள், 101 சேவல்கள் நேற்று பலியிடப்பட்டு அசைவ உணவு தயாரிக்கப்பட்டது.  பிறகு தீவு முனியசாமிக்கு பனையோலையில் அசைவ உணவு படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பிறகு ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பனை ஓலையில் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் இப்பகுதியை சேர்ந்த பனை தொழிலாளர்கள், மீனவ கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நள்ளிரவில் சிறப்பு பூஜை; ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உமயன் வலசை கிராமத்தில் இருளப்பசாமி, இருளாயி அம்மன் மற்றும் பட்டாணி கோயில் புரட்டாசி மாத களரி மற்றும் பொங்கல் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஏராளமான கிடாக்கள், சேவல்கள் பலியிடப்பட்டு அசைவ உணவு சாமிக்கு படைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பனை ஓலையில் வழங்கப்பட்டது.

The post சாயல்குடி அருகே பனைத்தொழில் சிறக்க 51 கிடாக்கள், 101 சேவல்களை பலியிட்டு கமகம கறி விருந்து: பனை ஓலையில் பரிமாறி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...